Search This Blog

Loading...

Sunday, July 19, 2015

சொல்லியவண்ணம் செயல்

Tuesday, July 14, 2015
                                               

                                          
காமராசர் பிறந்த தின விழா – 113 (2015) வாழ்த்து மடல்.
காமராசரே உம்மீது காதல் கொண்டேன்-
கரம் பற்ற அல்ல;கவிதை பயில.                                                 
கர்மவீரரே உம்மீது கனிவு கொண்டேன்-                                                                                                                             
கரிசனத்திற்காக அல்ல;கடமை ஆற்ற.
படிக்காத மேதையே உம்மீது பரிவு கொண்டேன்-
பணத்திற்காக அல்ல;படிப்பறிவினை ஊட்ட.
தென்னாட்டுக்காந்தியே உம்மீது தீராக் காதல் கொண்டேன்-
திமிருக்காக அல்ல;தென்தமிழ் பாட்டெழுத.
செயல்வீரரே உம்மீது செந்தமிழ் தொடுத்தேன்-
செலவழுங்க அல்ல;செவ்வியல் பண்பறிய.
கருப்புக்காந்தியே உம்மீது கனவு கொண்டேன்-
கலைந்துபோக அல்ல;கற்பனை ஊற்றாய்ப் பெருக்கெடுக்க.
கிங்மேக்கரே உம்மீது கீதம் புனைந்தேன்-
கிறுக்கலுக்காக அல்ல;கீதையின் வழி நடப்பதற்காக.
காட்சிக்கு எளியோனே உம்மீது கானல் நீர் கொண்டேன்-
களைவதற்கு அல்ல; களங்கமில்லா  நெஞ்சோடு வாழ.
கடுஞ்சொல் கூறோனே உம்மீது கோலம் கொண்டேன்-
நிழலாவதற்கு அல்ல; நிஜமாவதற்கு.
கல்விக்கண் திறந்தவரே உம்மீது களிப்பு கொண்டேன்-
கலங்க வைக்க அல்ல-கலை பல பயில.
ஏழைப்பங்காளனே உம்மீது ஏற்றம் கொண்டேன்-
ஏளனம் செய்ய அல்ல;எளியோரைக்காக்க.
பதவியாசை இல்லாதவரே உம்மீது பக்தி கொண்டேன்-
  பசப்பலுக்காக   அல்ல;பாதைமாறி போகாமல் இருப்பதற்காக.
மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தவரே உம்மீது மதிப்பு கொண்டேன்- 
மையலுக்காக அல்ல; மகா சாதனைகள் புரிவதற்காக.
உன்னதத் தலைவரே உம்மீது உயிர் கொண்டேன்-
உசுப்ப அல்ல;உறவை மேம்படுத்த.
பிரச்சனையை எதிர்கொள்பவரே உம்மீது பிணைப்பு கொண்டேன்-
புறம் பேச அல்ல;பிறர் மதிப்பதற்காக.
சிவகாமியின் மகனே உம்மீது சீரிய நட்பு கொண்டேன்-
சிறகடிக்க அல்ல; சிந்தனை செய்ய.
பச்சைத்தமிழனே உம்மீது பாவை நோன்பு கொண்டேன்-
பாடிக்களிப்பதற்கு அல்ல; பண்பாட்டைக்காக்க.
தாயை மறந்தவனே உம்மீது தயை கொண்டேன்-
தழைக்க அல்ல;தாய் மண்ணைக் காக்க.
பெருந்தலைவரே உம்மீது பேரன்பு கொண்டேன்-
பெருமைக்காக அல்ல;போலச் செய்தலுக்காக.
ஒன்றா ? இரண்டா ? உம்மைப்பற்றி சொல்ல-
என் சொல் மனதில் ஓராயிரமாயிரம் சொற்கள் சொற்கோபுரமாய் சொக்குகிறதே.
சொல்லின் செல்வமே…. எத்தனைப் பட்டம்! எத்தனைத் திட்டம்!!
பட்டிதொட்டியெல்லாம் உன் சட்டம்!!!
நானோ உந்தன் வட்டம்….காந்தியவாதியே, கல்வித்தந்தையே…
உனையன்றி வேறு யாருமில்லை…நீயே எந்தன் தஞ்சம்.
என் வாழ் நாளே உந்தன் மன்றம்.


Friday, February 20, 2015

எனது 10ஆம் வகுப்பு சின்மயா மாணவர்களுக்காக நான் இன்று வழங்கிய பிரிவுரை மடல்

வா என்றழைப்பதற்குள் வருடங்கள்
போய்விட்டனவே !!

வண்ண மலர்களால் அலங்கரிப்பதற்குள்
வசந்தம் போய்விட்டனவே!!!

சிவப்புக் கம்பளம் விரிப்பதற்கு முன்பே
சிறகடித்துப் பறக்கப் புறப்பட்டனவே!!

அன்பு வெளிப்படும் வேளையில்
அன்னங்கள் அகல்வது ஏனோ?

பத்தரை மாத்துத் தங்கங்கள் இன்று
பட்டாம்பூச்சியாய்த் திரிவது ஏனோ?

தங்கக் கிரீடங்கள்
தடம் பதிக்கத் துள்ளுவது ஏனோ?

நகையாடிய செவ்விதழ்கள் இன்று
நனி மகிழ மறுப்பது ஏனோ?

கவச குண்டலமாய் கம்பீரமாய்
நின்ற  உம் இரு விழிகள்
இன்று இலைமறைக்காயாய் இருப்பது ஏனோ?

சலங்கையின் சாரல்கள் போல்; உன்
சரமழையின் சரீரம் குறைந்தது ஏன்?

மனம் மணக்கும் மாலைகளே; இன்று
மனமகிழ மறுப்பது ஏனோ?

இரகரகமாய், ரம்மியமாய், இரத்தினங்களாய்
நகர்வதும் ஏனோ?

ஏன்? ஏன்? என்ற புதிருக்குப் புரியாமல்
புயலுக்குப்பின் அமைதியாய் ஆவதும் ஏனோ?

ஏனென்று நீ என்னைக் கேட்டால்; கேள்வியின்
கோலமாய் விடையளிப்பேன்
அது பிரியா விடையென்று!!

பிரிவு என்பது நிரந்தரமல்ல
அது நம்மைப் பிணைக்கும் பரிவு என்று
என்னால் உரைக்க முடியும்!!

ஆம் குழந்தாய்! உன்னுடைய
ஒவ்வொரு புதிருக்கும்,

நீ விடைகாண
விண்ணை வெற்றிகொள்ள

 உம்முடைய பரிவு; இன்று
பிரிவாகப் பிண்ணி நிழலாடுகிறது.

இந்த நிதர்சனமான உண்மையை
உமக்குள் ஏற்று; பரிவு
என்ற பிணைப்பைப் பிரிக்க
எந்த பிரிவுக்கும் முடியாது என்று கூறி… நீவிர்

விண் என்ற வெற்றியை நாட்ட;
கண்மனி என்று உன் பெற்றோர்கள் போற்ற

பலே மாணவர்கள் எனப் பள்ளி புகழ
அதுதான் மாணவர்களென
பிற ஆசிரியர்கள் போற்ற - ஆனால்
இதுதான் என் மாணவர்களென
நான் இறுமாப்புக் கொள்ள
விரைந்திடுங்கள், செயலாற்றிடுங்கள்!!

விண்ணில் விதைத்த விளக்கொளி
சுடர்விட்டுப் பிரகாசமாய் ஜொலிக்க;

சின்மயாவின் சித்திரங்களாய்
சித்ரகலாவின் புத்திரர்களாய்
வாகை சூட; 

வண்ண மயில்தோகை விரித்தாடும்
மயிலொத்த உங்களை வாழ்த்தி அனுப்புகிறேன்….
அன்பை எனக்கு அணுதினமும் தருவீர்களென்று….

முயலுங்கள், முனையுங்கள், முனைப்புடன் செயல்படுங்கள்
முடியுமென்று முக்கனியையும் நாட்டுங்கள்.

இறுதியாக……….
முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்,
முயலாமை வெல்லாது.
என்பதை உனக்குள் கொண்டு

பெற்றோரையும், உற்றோரையும்,
உதவியோரையும் மனதில் நிறுத்தி;
உனக்காக, உன் வாழ்விற்காக
கடைமையை ஆற்று.

அப்பொழுது,
கல்லும் கரைந்து கனியாக
உம் கரங்களில் மாறும் !!
என வாழ்த்திப் பிரியா விடை தருகிறேன்.
-          இவண்
சித்ர கலா
(தமிழாசிரியை)Translate